சென்னை
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நாளை ஓட்டுநருடன் நடத்துநர் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுகிறது. இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், (ஆன்லைன்) இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11 ஆயிரத்து 117 பேர்களுக்குச் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய எழுத்துத் தேர்வு கடந்த 19-ந் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
மேற்படி எழுத்துத் தேர்வில் 9 ஆயிரத்து 352 பேர்கள் பங்கேற்றனர். ஆயிரத்து 765 பேர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவில்லை. எழுத்துத்தேர்வுக்குரிய விடைக் குறிப்பு அண்ணா பல்கலைக் கழக இணையதளம் https://tancet.annauniv.edu/tancet/setc/index.php-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in வழியாக மேற்படி இணையதளத்திலேயே 27-ந் தேதி (நாளை) காலை 09.30 மணியளவில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உபயோகித்து ஓ.எம்.ஆர். விடைத்தாளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மதிப்பெண் வெளியீட்டிற்குப் பின்னர், போக்குவரத்துத்துறை அரசாணைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வித் தகுதி, வயது, சாதி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.
மேலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (கே) துறை அரசாணை வழிகாட்டுதல் படி முன்னுரிமை பெற்றோருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரம் இனவாரியாக கடைப்பிடிக்கப்படுவதுடன், மனிதவள மேலாண்மை (கே.2) துறை அரசாணையின்படி முன்னுரிமை பின்பற்றப்பட்டுப் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.