சென்னை: புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘What Karwad’ உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்படக் கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே சாலை விபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப், புகைப்படக் கலைஞர் மட்டுமின்றி ஆன்லைனில் பிரபலமான what a karwad என்ற உணவு நிறுவனத்தை யும் நடத்தி வந்தவர். நேற்று தான் ஸ்டாலின் ஜேக்கப் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில்தான் விபத்தில் சிக்கி அவர் காலமாகியுள்ளார்
அவரது மறைவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் @stalinjacka இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்! என தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர்& சமூகவலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல்.உன் உழைப்பை என்றும் மறவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எப்போதும் சிரித்த முகம், சற்றும் சோர்வில்லாத களப்பணி, சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு என வலம் வந்த அன்புத் தம்பி ஸ்டாலின் ஜேக்கப்பின் அகால மரணம் இந்த இரவைக் கொடுந்துயராக்கி விட்டது.
இளமையில் நேரும் அன்பானவர்களின் அகாலமரணம்
சில ஏன்களையும் எப்படிகளையும் எப்போதும்
தீராச் சுமையாய் நம்மேல் ஏற்றிவைத்து விடுகின்றது
அதன் கனம் தகித்தத் துவங்கும்
இப்பின்னிரவில்
எச்சரிக்கையற்ற நிலச்சரிவாய்
நமை விழுங்குமதை கைபிசைந்து சபிக்கறேன்
ஜேக்கப் தம்பி..
எப்போதாவது தான்
ஒரு புத்தகத்தோடு எனைவந்து சந்திப்பாய்
மாறாத புன்னகையுடன்
ஒரு புகைப்படம் என்னுடன்-
அம்மட்டே உன் ஆசையும்!
என் வெற்றிக்கான
உன் வியர்வையின் ஒரு துளிக்கு
ஈடாகாது என் கண்ணீர்
இருந்தாலும் அது மட்டுமே
இப்போது என்னிடம்.”
என்று தமிழச்சி தங்க பாண்டியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.