சென்னை: தமிழகஅரசில், அரசு பணி வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில்,  சென்னை தலைமைச் செயலக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதைக்காட்டி அரசு வேலை வாங்கித்தருவதாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவது வழக்கமாகவே உள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபித்து வருகிறது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது,  கோவையில் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஆத்மா சிவக்குமார் என்வர்,  அரசு வேலை வாங்கித் தருவதாக, 68 பேரிடம், 2.17 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது,  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ரவி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.