டெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டென்பெர்க் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அதானி பங்குகள் கடுமையான சரிவை  சந்தித்து வருகிறது. உலகின் 3வது பணக்காரர் பட்டியலில் இருந்து 31 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி, பிரதமர் மோடியின் நண்பர் என்பதால், அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஹிண்டென்பெர்க் அறிக்கை வெளியானது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க வேண்டும் என்றும்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மத்தியஅரசு விசாரணை குழு தொடர்பான அறிக்கையும், குழுவினர் பட்டியலையும் வழங்கியது. ஆனால், அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், தற்போது ஓய்வுபெற்ற  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில், பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அதனால்,  முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை. அதனால்,  முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர்  இடம்பெறுவார்கள்.

 இந்த சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.