டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த திரிபுரா, மேகலாயா, நாகலாந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 5 மாநிலங்களின் நடைபெற்ற 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரம் வெளியாகி உள்ளது.

இதில் திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் மாநில கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

திரிபுராவில் பாஜக 23 தொகுதிகளிலும் இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் முன்னலை வகித்து வருகிறது.

மேகாலயாவில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16 தொகுகளில் முன்னிலையில் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தலா 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலங்களில் திரிபுராவில் மட்டும் பிப்ரவரி 16ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.