சென்னை வில்லிவாக்கம் ஏரியைச் சுற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுடன் இந்த பூங்கா அமையவிருக்கிறது.
ஏரியின் மீது அதன் மேல்மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்தில் 250 மீட்டர் நீளத்திற்கு நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
150 மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி பதிக்கப்பட்டு இருக்கும் இந்த பாலத்தின் மீதிருந்து அடியில் ஏரி நீரை பார்த்து மகிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்றடி அகலம் உள்ள இந்தப் பாலத்தில் 500 பேர் வரை செல்ல முடியும் என்ற போதும் இதில் 100 பேருக்கு மேல் அனுமதிக்கப் போவதில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காவுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாலத்தின் இருபுறமும் கேட் அமைக்க உள்ளதாகவும் கூறிய அதிகாரிகள் பாலத்தின் மீது செல்ல தனியாக கட்டணம் வசூலிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய சென்னை ஐஐடி-யில் சிவில் இன்ஜினியரிங் படிக்கும் 50 மாணவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளது.
பாலத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்ய உள்ள இவர்கள் மையப்பகுதியில் அதிக அழுத்தத்துடன் இந்த பாலத்தை அசைத்துப் பார்த்தும் சோதனை நடத்த உள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதியில் அமையவிருக்கும் இந்த பூங்கா மற்றும் கண்ணாடி பாலம் குறித்த செய்தி கடந்த இருதினங்களுக்கு முன் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.