சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் டெல்டா மாவட்டம் உள்பட கடலோர மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  மேலும் சென்னை போன்ற பல நகரங்களில் தொடக்க காலத்தில் ஒருசில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த 10 நாட்களாக மழை ஏதும் இல்லாத நிலையே உள்ளது. இந்த நிலையில்,  தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி வருவதாக  இன்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் சென்னை, புதுச்சேரி உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு 6-ந்தேதி மாலையில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து மேற்கு-வடமேற்கில் நகர்ந்து படிப்படியாக புயலாக வலுபெற்று தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அரசின் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,  மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் காற்று வீசும் என்ப தால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.