சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ₹116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

நடப்பாண்டு தீபாவளிக்கு புதிதாக 9 இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யினால் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. . நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு பிரத்யேகமான முறையில் (Modified Atmospheric Packing) பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட அதிகம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.85 கோடிக்கு சிறப்பாக விற்பனை செய்யப்பட்டது. மேலும், இந்த ஆண்டு, அரசு துறை சார்ந்தவர்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும்,  இந்த ஆண்டு ஏற்கெனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன் 9 புதிய இனிப்பு வகைகளுடன் ரூ.250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஆவின் நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% விற்பனை அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.