சென்னை: கொடநாடு கொலை வழக்கை, சுமார்  5ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக நேபாளம் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காகடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை திமுக அரசு பதவி ஏற்றதும் மீண்டும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை முதலில் தனிப்படை விசாரித்து வந்த நிலையில், திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, விசாரணை அதிகாரியையும் அரசு மாற்றி உள்ளது.

இந்த நிலையில், கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி மாதவன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி முருகவேல், சந்திர சேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்படவுள்ளது. இவர்கள்,  கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்த தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரிக்கவும், கனகராஜ் விபத்து சம்பவம் தொடர்பாக சேலத்திற்கு சென்று விசாரணை செய்யவும் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கொடநாடு சம்பவத்தில் முக்கிய நபரான மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா நேபாளத்தில் இருக்கும் நிலையில் அங்கு சென்று விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.