கோவை: ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைகள் புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை, இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யலாம் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைகள் திமுக ஆட்சியின் ஓராண்டு கழித்த நிலையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டு, அது சட்டப்போவையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளது தெரிய வந்தாலும், இந்த அறிக்கைகள் மீது சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகின்றன. விசாரணை ஆணையம் என்பதே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஆளும் அரசுகள், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்ப விசாரணை ஆணையம் அமைத்து, சர்சைகளுக்க முற்றுப்புள்ளி வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள், அதிமுக தலைவர்கள் மீதே ஒருதலைப் பட்சமாக குற்றங்களை சுமத்தி இருப்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஏராளமான சந்தேகங்களையும் விதைத்துள்ளது.
இந்த நிலையில், கோவை சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆறுமுகசாமியின் அறிக்கை புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை என்றும், ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை புரொபஷனல் கிடையாது. இதில் டெக்னிக்கலாக ஏதும் சொல்லப்பட வில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்யையை காவல்துறையினர் பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும், இதை வைத்து அரசியல் வேண்டுமென்றால் பண்ணலாம் என்றார்.
சட்டசபையில் அதிமுகவின் இருக்கை தொடர்பான கட்சி சார்ந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்ற விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசியவர், “இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. ஆனால், நூல் விலை உயர்வால், தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து பின்னலாடை தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது. கொரோனா காலத்தில் படுக்கை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்றனர். அதை கவனத்தில் கொண்டு மேலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும்.
மக்களின் 60 ஆண்டுகளாக கோரிக்கை அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், ஆட்சியாளர்கள் 95 % பணி கள் முடிந்ததாக கூறுகின்றனர், ஆனால், இன்னு முடிவாகாமல் உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பரம்பிகுளம் டேம் வாய்க்கல் சட்டர் உடைந்து 12 டி .எம். சி., நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பாண்டியாரு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டமும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் சேர்ந்த பிரட்சனை இதை இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேசி முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. முதல்வர் கவனம் செலுத்துகிறார் .ஆனால் அது போதுமானதாக இல்லை. போதுமான அளவு இந்தத் துறையில் காவலர்கள் இல்லை.
ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தேன். கட்டணம் ரூ.3300 ஆனது. ஆனால் ஆம்னி பேருந்தில் ரூ.3,700 ஆக உள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் மாபியா போல விலையேற்றம் செய்கின்றனர். ஒரு வருடத்தில் நான்கு முறை விலை ஏற்றி உள்ளனர்.
தீபாவளிக்காக டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்கிறார்கள். டாஸ்மாக் மூலம் வரும் நிதி வளர்ச்சி கிடையாது. வீழ்ச்சி தான். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு வைப்பதற்கு பதில் கல்விக்கு இப்படி இலக்கு வையுங்களேன். தடுப்பூசிக்கு இலக்கு வையுங்கள். குடிக்கு இலக்கு வைக்காதீர்கள். இது அரசுக்கு கேடோ கேடு என்று சாடினார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஆண்டு 30 நாட்களும், அதற்கு முந்தைய ஆண்டு 28 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் நடந்துள்ளது. தற்போதும் அதுபோலத்தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.