சென்னை: ஐஜிவீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிஜிபியின்  ஆபரேசன் மின்னல் வேட்டை என்னாச்சு?  என்றும் தமிழகஅரசை கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் ரவடிகளை ஒழிக்கும் ஆப்ரேஷன் மின்னல் வேட்டை என்ற பெயரில் டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து, மாநிலம் முழுவதும் தவுடிகள் வேட்டை நடந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.  இதன் மூலம் 72 மணிநேரத்தில் 3,905 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், பல இடங்களில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. சென்னையில் ரவுடிக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவல்துறை ஐஜி வீட்டிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், டிஜிபியின் அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளார் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 16 மாத கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலையது, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் போன்றவை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிலைமை மிகமிக மோசமாகிவிட்டது. இதனால் மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகக்காவல்துறைத் தலைவர், ஆப்ரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ள தாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரெளடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்ரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரெளடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும் போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், ஊஊகூஏ, கேமரா, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன

பணியில் உள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டிற்குள் ஆப்ரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரெளடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்கு சரியான விளக்கமில்லை.

இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும், இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு கூறி உள்ளார்.