சென்னை:
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நாளிலேயே 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். செப்டம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இன்று சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் திமுகவின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.