சென்னை: ரேஷன் அரிசியை வாங்கி வீணாக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருவள்ளூர் பகுதியில், அரசின் நியாய விலை கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ரேசன் கடைகளுக்கு அரிசி அனுப்பப்படும் அரிசி உற்பத்தி செய்யப்படும் நவீன அரிசி ஆலைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தமிழ்நாடு அரிசி சங்க மாநில தலைவர் துளசிங்கம் கோபி தலைமையிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், தமிழக அரசு மூட்டை ஒன்றுக்கு அரசு அரிசி உற்பத்தி செய்து தர 40 ரூபாய் அரவை கூலி வழங்கி வரும் நிலையில் 100 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, அங்குள்ள மருதம் பல்பொருள் அங்காடி மற்றும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டுஆய்வு செய்த அவர் மருதம் பல்பொருள் அங்காடியில் விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 100டன் ரேசன் அரிசி, 3500கிலோ கோதுமை கடத்தப்பட்டு உள்ளதாகவும், ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில், இதுவரை 11, ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் 113 பேரை சிறையில் அடைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 2962 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 63 பேரை கைது செய்துள்ளதாகவும் எட்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள்மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்த விரும்பாக பொதுமக்கள் அதை சிறு வியாபாரிகள் கடைகளுக்கு விற்கக் கூடாது என்றவர், நல்ல திட்டத்தை முறையாக பொதுமக்கள் செயல்படுத்த உதவ வேண்டும். அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.