சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்தித்து பேசியதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி தலைமையிலான அதிமுக அழிவை தடுக்க முடியாது  என்று கூறியவர்,  அதிமுக-வை மீட்க யார் முன் வந்தாலும் ஆதரவு உண்டு என தெரிவித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி  தரப்பு, தங்களது  ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். அதன்படி, முன்னாள் அதிமுக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா  சந்தித்து பேசினார்.  இதைத் தொடர்ந்து,  நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பண்ருட்டியை சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  ”அதிமுகவின் மூத்த முன்னோடி, எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக பண்ருட்டி ராமச்சந்திரனை நாங்கள் சந்தித்தோம். நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களையே. அடிப்படைத் தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ, இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த வழியில்தான் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக தான் கருதுகிறேன். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் அனைவரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இதயப்பூர்வமான ஏற்பாடு. பொறுத்திருந்து பாருங்கள் எல்லாம் நன்மையாக முடியும். உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வோம்” என்றார்.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக முக்கியமான நெருக்கடியில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வி யடைந்துள்ளது என்றவர்,  எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை என சாடினார்.

இபிஎஸ் தலைமை தொடர்ந்தால், அதிமுகவின் அழிவை தடுக்க முடியாது என்றவர், அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமியை மாற்றுவது தான் அதிமுகவை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என கூறினார்.

அதிமுகவை மீட்க யார் முன்வந்தாலும் என் ஆதரவை தருவேன். தலைமையை மாற்றாவிட்டால் அதிமுகவை காப்பாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இனி ஆட்சியை பெற வேண்டுமென்றால் அதற்கான வழி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இல்லை, டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார் என்ற அவர், ஓ.பி.எஸ் – சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது என்றும் அதிமுகவை மீட்க அவர்கள் போராடுகின்றனர் என்றும் கூறினார்.