திருவனந்தபுரம்: கன்னி மாத பூஜைக்காக  சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.

பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில், மாதந்தோறும் மாதப்பிறப்பின்போது திறக்கப்படுவது வழக்கம். அதுபோல, மலையாள மாதமான கன்னிமாத பூஜைக்காக சபரிமலை  கோவில் நடை நாளை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக தொடர்ந்து 60 நாட்கள் கோவில்கள் திறந்திருக்கும். அப்போது பல லட்சக்கணக்கானோர், அய்யப்பனை தரிசித்து செல்வர். இதுதவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக (மலையாளத்தில் கன்னி மாதம்) சபரிமலை அய்யப்பன் கோவில் நடை  நாளை 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து,  21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.