கடலூர்: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார். இது கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்து, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியின்று சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். அதிரடிக்கு பெயர்போன வேல்முருகன், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்ககூட்டத்தில் பேசிய வேல்முருகன், பாமக கட்சியில் இணைவதற்க்கு முன்னால் திமுக குடும்பம் தான் எங்கள் குடும்பம் என்றவர், அந்த பழக்க வழக்கத்தின் அடிப்படையில்தான், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று என்னுடைய கட்சியை நான் உங்கள் கட்சியுடன் இணைக்கிறேன் எனக்கு ஒரு அமைச்சர் பதவி தாருங்கள் என்று கேட்டால் அவர் கொடுக்காமல் போய்விடுவாரா..? என கேள்வி எழுப்பினார்.
திமுகவில் இருக்கக்கூடிய பாதி அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து சமீப காலத்தில் வந்தவர்கள் என தெரிவித்தவர், சமீபத்தில் வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவில் அமைச்சர் பதவிகொடுத்து அழகு பார்க்கும்போது அவர்களெல்லாம் என்னைப்போல பேச்சுத் திறமையோ அல்லது இளைஞர்களை அணி திரட்டக் கூடிய வல்லமையோ பெற்றவர்கள் கிடையாது என குறிப்பிட்டார்.
(அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய சேகர்பாபு, செந்தில்பாலாஜி, முத்துசாமி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.)
அந்தந்த மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர், வேல்முருகனுக்கு பதவி,பணம் இது எதுவும் தேவை கிடையாது தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் அதுதான் என் குறிக்கோள் என தெரிவித்தார்.