சென்னை: கும்பகோணம் அருகே 1000ஆண்டு பழமையான 7உலோக சிலைகள் மீட்கப்பட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற சிலைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு, அங்குள்ள காட்சிக்கூடங்களை அலங்கரித்து வருகிறது. இதுபோன்ற திருடுபோன சிலைகளை மீட்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக கோயில்களிலிருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கி, சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது, கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபாதிக்கு சொந்தமான இடத்தில் 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகளை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.