டெல்லி: தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது. 2 தவணை வரி பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடியை மத்தியஅரசு விடுவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு தொகுப்பில் இருந்து ரூ.58,332 கோடி வரிபங்கினை விடுவிக்க வேண்டும். ஆனால், தற்போது இரண்டு தவணைகளின் தொகையாக ரூ.1,16,665 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு தொகுப்பிற்கு கிடைக்கக்கூடிய வரியில் இருந்து, மாநில அரசின் தேவைகள் மற்றும் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை விடுவிக்க வேண்டும் என்பதை நிதி குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்படுகிறது. இந்த வரிப்பகிர்வு தொகையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.

அதன்படி அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ. 20,928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக  பீகாருக்கு ரூ.11,734 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.9,158 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,776 கோடியும் மகாராஷ்டிராவுக்கு ரூ.7,369 கோடியும், தமிழகத்திற்கு 4,758 கோடி என இரண்டு தவணையாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

குறிப்பாக மாநிலங்கள் தங்களுடைய முதலீடு மற்றும் இதர செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இரண்டு தவணைகள் ஒரே தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளது.