1200 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டுமென்பதே அது! அதன் விளைவே, காஞ்சியில் எழுந்த கயிலாயநாதர் திருக்கோவில். காஞ்சி கைலாசநாதர் கோவில் இராஜசிம்மவர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோவில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது.
தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோவில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது இராஜசிம்மனின் முன்னோர்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள கொற்றவை, துர்க்கை, மூத்ததேவி, யானைத் திருமகள், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. நின்ற நிலையில் பாய்ந்தவாறு உள்ள யாளித்தூண்கள் வியப்பூட்டுபவை. இக்கோவில் முழுவதும் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பல சிற்பங்களில் காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கயிலாய நாதரை தரிசித்துச் செல்கின்றனர்.