சென்னை

மிழக முதல்வருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலோசித்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு  எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த வருடம் முதல் மூடப்பட்டுள்ளன.  இடையில் சில வகுப்புக்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளன.  சென்ற வருடமும் இந்த வருடமும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தது.  இது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.  அப்போது செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் நேரடி வகுப்புகளுக்கான வழிமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.