துரை

பொது இடங்களில் தேவையான அளவு இலவச கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூரைச் சேர்ந்த சரவணம் என்பவர் ஒரு பொது நல மனுத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் அவர், ”பொதுமக்களுக்கு சுகாதாரமான, இலவசக் கழிப்பறைகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட கழிப்பறைகளில் ரூ.5 முதல் 10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆயினும் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை.  ஆகவே, தமிழகத்தில் விமான நிலையம், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள்,கோவில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.  நீதிபதிகள் என் கிருபாகரன் மற்றும் பி புகழேந்தி ஆகியோர் அமர்வு இதை விசாரித்தது.

இன்று அமர்வு பிறப்பித்த உத்தரவில், “பொதுமக்களுக்குத் தூய்மையான சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.  ஆகவே வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் போதுமான எண்ணிக்கையில் இலவச பொதுக் கழிப்பறைகளைப் பயன்பாட்டுக்குக்  கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுக் கழிப்பறைகள் பராமரிப்புப் பணி நடைபெற வேண்டும். மேலும் அரசு தரப்பில் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.