சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ கிட் அணிந்து வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதுபோல, அதிமுக அவைத்தலைவர் மசூசூதனனும் பிபிஇ கிட் அணிந்து வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்குமத்தியில், மாநில சட்டமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
அதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெறுகிறது. பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணி உடன் முடிவடைந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஒரு மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் அலுவலர்களுக்கும் பிபிஇ கிட் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கொரோனா தொற்று தடுப்பு உடையான பிபிஇ கிட் உடை அணிந்து வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மகளிரணி செயலாளரும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் உடை அணிந்து வந்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு கவச உடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைவருக்கும் பிபிஇ கிட் அணிந்திருந்தனர்.
அதுபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவரும் மூத்த நிர்வாகியுமான மசூசூதனனும் பிபிஇ கிட் அணிந்து வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மடிப்பாக்கம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19வயது இளைஞர் ஒருவரும் கொரோனா கிட் அணிந்து வந்து தனது வாக்கை செலுத்தினார்.