ஆர்யா, விஷால் நடித்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம் 2011-ல் வெளியானது. அம்பாசமுத்திரம் சிங்கம்பட்டி ஜமீனை தரக்குறைவாக விமர்சித்து படமாக்கப்பட்டிருந்ததாக படம் வெளியானபோது விமர்சனம் எழுந்தது.
சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார் .
இன்று காலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜரான நிலையில் அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்ந்த ஜமீன் தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார்.
நடிகர் ஆர்யா மன்னிப்பு கோரினால் வழக்கு வாபஸ் பெறுகிறீர்களா என நீதிபதி ஜமீன் தரப்பிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவே நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதனையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஆனால் இயக்குநர் பாலா மீதான வழக்கு தனியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.