டில்லி

ந்திய தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் துன்புறுத்தப்படுவதாக 9771 புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் நன்கு வசித்து வந்தாலும் ஒரு சிலர் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இது குறித்து இந்திய தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தொழிலாளர் துன்புறுத்தல் புகார்களை இந்திய தூதரகம் பதிந்து நடவடிக்கை எடுத்து வருவது குறித்து நேற்று மக்களவையில் வினா எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வளைகுடா நாடுகளில் இந்த வருடம் ஜூன் 30 வரை ஒரு வருடத்தில் இந்திய தொழிலாளர்கள் துன்புறுத்தல் குறித்து 9771 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக குவைத்தில் 2377 புகார்கள் பதியப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் 2244 புகார்களும் ஓமனில் 1764 புகார்களும் பதியப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அமீரகத்தில் 1477 மற்றும் கத்தாரில் 1459 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பெஹ்ரைனில் வெறும் 450 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த புகார்களில் ஊதியம் வழங்காமை, ஊழியர் உரிமை மறுப்பு, உள்நாட்டு உரிமம் புதுப்பிக்கப்படாதது, ஓவர்டைம் ஊதியம் அளிக்காமை, தாய்நாட்டுக்கு வர அனுமதி அளிக்காமை, வார விடுமுறை அளிக்காதது, அதிக வேலை நேரம், ஒப்பந்தம் முடிந்தும் பணியில் இருந்து விலக்காமல் வைத்திருப்பது, இறப்பு இழப்பீடு அளிக்காதது உள்ளிட்ட பல இனங்கள் உள்ளது.

இவர்களின் புகார்களைக் கவனிக்க இந்தியாவைச் சேர்ந்த 42 அதிகாரிகளும் 202 ஊழியர்களும் நியமிக்கபட்டுளனர். இதைத் தவிர அந்தந்த நாடுகளைச் சேர்ந்த 354 ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அந்தந்த நாட்டில் அவ்வப்போது மாறும் சட்டத்துக்கு ஏற்ப இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்கின்றனர்” என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.