ண்டன்

விஜய் மல்லையா தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மெல் முறையீடு வழக்கு 2020 வருடம் பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கு மேல் மோசடி செய்த இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி விட்டார். அவரை பிடித்து இந்தியா அழைத்து வர அரசு சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜய்மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட பிரிட்டன் உள்துறையின் அனுமதியை நீதிமன்றம் கோரியது.

உள்துறைச் செயலர் அனுமதி அளித்த பிறகு விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு இட்டது. அத்துடன் அவருக்கு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதையொட்டி விஜய் மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா கடனை திருப்பித் தரத் தயாராக இருந்தும் இந்தியா அதை பெற முன் வராமல் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதில் மும்முரமாக உள்ளதாக விஜய் மல்லையா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்திய அரசு தரப்பில் அவர் பண மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடி வந்ததாகவும் தற்போது பிடிபட்ட பிறகு கடனை திருப்பி தர கூறுவதாகவும் தெரிவித்தது.

லண்டன் உயர்நீதிமன்றம் இன்றைய விசாரணையில் இந்த வழக்கு வரும் 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் அந்த சமயத்தில் இந்த வழக்கு மூன்று நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் நீதிமன்ற அதிகரி தெரிவித்துள்ளார்.