வாஷிங்டன்

மெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97000 இந்தியர்கள் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இந்தியர்களுக்கு அமெரிக்காவில் குடியேற ஆசை இருந்தும் அந்நாட்டுச் சட்டங்கள் அதற்கு உதவியாக இல்லை.  எனவே இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்கின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்கள் பெரும்பாலும் மெக்சிகோ மற்றும் கனடாவின் எல்லை வழியாக நுழைய முயல்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத்துறையின் தரவுகளின்படி கடந்த 2022 அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான ஓராண்டில் 96,977 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்று  பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

இவர்களில் 30000 பேர் கனடா எல்லையிலும் 41770 பேர் மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற போது பிடிபட்டுள்ளனர்.  மீதம் உள்ளவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்த பிறகு பிடிபட்டுள்ளனர்.  கடந்த 2019-20 ஆம் வருடம் இந்த எண்ணிக்கை 19883 ஆக இருந்துள்ளது  தற்போது இது கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந்துள்ளது. 

இவர்களில் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.  பிடிபட்டவர்களில் 730 குழந்தைகளும் உள்ளனர்.  இந்தியக் காவல்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு ஒருவர் பிடிபட்டார் என்றால் அதைப் போல் 10 மடங்கானவர் அமெரிக்காவுக்குள் நுழைந்திருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.