கோழிக்கோடு: கேரளாவின் டியூஷன் மையம் ஒன்றில் பங்குபெற்ற 91 அரசுப் பள்ளி மாணாக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி தாலுகாவைச் சேர்ந்தது மரன்சேரி. இங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்குத்தான் இந்த நிலை. இந்த நிலை ‘சூப்பர் பரவல்’ என்றழைக்கப்படுகிறது. தற்போது அந்த டியூஷன் மையம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொன்னானியில் அமைந்த 2 பள்ளிகளில், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொன்னானி தாலுகாவிலுள்ள மரன்சேரி மற்றும் வென்னேரி பகுதி பள்ளிகளையடுத்து, அருகிலுள்ள வேறுசில பள்ளிகளும் தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டது. மேலும், அடுத்தடுத்த நாட்களின் நிலைமையைப் பொறுத்து, அப்பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப் பிரிவு மாணாக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.