சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  கூட்டணி கட்சியினருடன் கலந்து பேச வேண்டும் என திமுக தலைமை, திமுக நிர்வாகிகளுக்கு  உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோம் 6ந்தேதி மற்றும் 9ந்தேதி என  இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கடந்த 13ம் தேதி மாலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இம்மாவட்டங்களில் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (செப்.,15) துவங்கியது. அலுவல் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். செப்.,22 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில்,  நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகளுடன், மாவட்ட கழக செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.