திருபுவனம்: ”கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ள தமிழ்நாடு  தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு குறித்து இன்னும்முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் 30ந்தேதியுடன் முடிவடைந்தன. இந்த அகழ்வாய்வில், கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பொருட்கள், தமிழன் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்ததும், அப்போதே அவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்திருப்பது தெரிய வந்துள்ளது என  தொல்லியல் துறை தெரிவித்தது. தற்போது கீழடியில்  கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம்  உடன் கீழடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கீழடியில் ஏற்கனவே அகழ்வாய்வு பணிகளுக்காக பல பள்ளங்கள் தோண்டப்பட்டு, மூடப்பட்டுள்ளது.  6 கட்ட அகழாய்வுகளில் தோண்டப்பட்ட குழிகளும் மூடப்பட்டன. ஆனால் 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாது. அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி ‘அகழ் வைப்பகம்’ ஏற்படுத்தப்படும் எ

அகழாய்வு குழிகள் திறந்தநிலையில் வைப்பது இதுவே முதல்முறை. மேலும் திறந்தவெளியில்பார்வைக்கு வைக்கும்போது, கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலம் மேற்கொள்ளப்படும்.

கீழடியில் நடைபெற்ற 7 ஆம் கட்ட அகழாய்வில் பல அடுக்குகள் கொண்ட கை வேலைப்பாடுகளால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டறியப்பட்டது. இந்த உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த உறைகிணற்றின் விளிம்பு பகுதியில் கழுத்துக்கு கீழ் வால் மட்டுமே தெரியும்படி அந்த மீன் சின்னம் காணப்படுகிறது.

8-ம்கட்ட அகழாய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் தனது முகநூல்  பக்கத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறைகிணற்றின் புகைப்படத்தை பதிவிட்டு, கீழடியில் முதன்முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைகிணறு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.