சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தங்களுக்காக 88 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களையொட்டி, வாகனம் நிறுத்தும்  இடங்களை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏற்கனவே, அடையாறு சர்தார் படேல் சாலை, அம்பத்தூரில் தொழிற்பேட்டை சாலை, அண்ணா நகர் 2-வது அவென்யூ, அசோக் நகர் 3-வது அவென்யூ, பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது.

இந்த நிலையில் கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக சென்னையில்,  88 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வாகனங்களை நிறுத்தும் இடங்களில் தேவையான பார்க்கிங் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரசீது வழங்குவதற்காக தேவையான எந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பார்க்கிங் பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினசரி கட்டண வசூலும் அதிகரித்துள்ளது. ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக இந்த கட்டண வசூல் உயர்ந்துள்ளது.