சென்னை: சென்னையில் மறு கட்டுமான திட்டத்தில் புதிதாக 8,723 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன என்ற  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள், திட்டங்கள்  குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய   அமைச்சர்,  மறுகட்டுமான திட்டத்தின்கீழ் மயிலாப்பூர் வன்னியபுரம், ஆண்டிமான்ய தோட்டம், பருவாநகர், நாட்டான்தோட்டம், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் தாமஸ் ரோடு பகுதி – 1 மற்றும் பகுதி – 2, சுபேதார் தோட்டம், கங்கைகரைபுரம், பத்ரிகரை, வடக்கு கிரியப்பா சாலை, பெரியபாளையத்தம்மன் கோயில், அப்பாசாமி, எழும்பூரில் உள்ள பெரியார் நகர், எம்.எஸ்.நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கொய்யாதோப்பு, சிந்தாதிரிப்பேட்டை என்.என்.நகர், காக்ஸ்காலனி திட்டப்பகுதிகளில் உள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

அதேபோல், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம், கொளத்தூர் தொகுதியில் ராஜாதோட்டம், ஜமாலியா, வில்லிவாக்கம் தொகுதியில் காந்தி நகர்,ராயபுரம் தொகுதியில் செட்டித்தோட்டம், துறைமுகம் தொகுதியில் பிஆர்என் கார்டன் திட்டப்பகுதிகளில் உள்ள மொத்தம் 7142 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 8723 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுமானம் நடைபெற்றுவரும் திட்டப்பகுதிகளில் மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர வளர்ச்சி குழுமம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளிலிருந்து பெறவேண்டிய அனுமதியை பெறுவதற்காக பிரத்யேகமாக ஒரு தனி அலுவலர் கோட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

இந்த கூட்டத்தில் வீட்டுவசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.