சென்னை:  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது  என அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட் பதிவிட்டுள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால், இதுவரை இணைக்காத மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள்.  அவர்களில் பலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி திமுக அரசு, அதை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இதற்காக மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கான  பணிகள் கடந்த ஆண்டு (2022)  நவம்பர் மாதம் தொடங்கியது   இந்த மாதம் (ஜனவரி)  31ந்தேதி வரை உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் மூலம், டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் இணைத்திருந்தனர். இதையடுத்து,    ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், டிவிட் பதிவிட்டுள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜனவரி 29ந்தேதி வரை, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 87.44% நிறைவு பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.