டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி  வழங்கியது. மேலுமு, இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வழங்கவும் அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஒபிஎஸ் தரப்பு 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக,  இபிஎஸ் ஓபிஎஸ் இடை, அதிமுக கட்சி சின்னம் பெறுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று (30ந்தேதி) தாக்கல் செய்ய  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

முன்னதாக. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்தது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வில் எடப்பாடி தரப்பில் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார்.

அதில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

உடனே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு உங்களது கோரிக்கையை தெரிவித்து விட்டீர்களா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, தகவலை பகிர்ந்து கொண்டோம் என்று பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி (இன்று) முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி இன்று இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க உத்தரவிட கோரியிருப்பதுடன், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க ஒத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்த இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வழங்க அனுமதி அளித்த நீதிபதிகள்,  மனு தொடர்பாக தேர்தல் ஆணையம், ஒபிஎஸ் தரப்பு 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.