சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர் என்றும், 10, 11, 12ம் வகுப்பு ஆகிய 3 வகுப்புகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 26.76 லட்சம் என கூறியுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பாண்டில் மொத்தம்  26,76,675 மாணாக்கர்கள்  பொதுத் தேர்வு எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் மொத்தம் 9,55,474 பேர். இவர்களில் 4,86,887 பேர் மாணவர்கள்,  4,68,586 பேர் மாணவிகள்.

11ஆம் வகுப்புபொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் மொத்தம் 8,83,884 பேர். இவர்களில்  4,33,684 பேர் மாணவர்கள், மாணவிகள் 4,50,198 பேர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராக உள்ள மாணாக்கர்கள் மொத்தம் 8,37,317 பேர். இவர்களில்  3,98,321 பேர் மாணவர்கள், 4,38,996 பேர் மாணவிகள்.

மூன்று (10, 11, 12ம் வகுப்புகள்) வகுப்புகளையும் சேர்ந்து 26,76,675 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.