சென்னை: சென்னையில் 791 முதியோர்களின் வாக்குகள் பதிவாகாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, தமிழகம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்ட 4.66 லட்சம் முதியவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்ய தகுதியானர்வர்கள். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 டி விண்ணப்பங்கள் 92,559 தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர். சென்னையில் 12,000 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 7,300 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தபால் வாக்களிக்க சம்மதம் தெரிவித்தவர்களிடம் முதியோர்களிடம் வாக்குப்பதிவு பெறும் பணி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் 5ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், சென்னையில் தபால் வாக்கு அளிப்பதாக விண்ணப்பித்தவர்களில் 791 முதியோர்களின் தபால் வாக்குகள் பதிவாகாத வாக்குகள் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அவர்களிடம் தபால் வாக்கு பெற 2 முறை வீட்டுக்கு சென்று அணுகியும் வாக்காளர் இல்லாததால் அந்த வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் சென்னையில் மொத்தம் உள்ள 7300 தபால் வாக்குகளில் 6509 வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்காத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாய்ப்பு கிடையாது என்றும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிவித்து உள்ளார்.