மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச ​மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸை முந்தி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஏற்கெனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைந்துள்ளார்

இங்கிலாந்துடனான தொடர் தொடங்கும்போது, மித்தாலி ராஜ் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருந்து வந்தார். ஆனால், அவரது அசத்தலான ஆட்டம் முதல் போட்டியிலேயே மின்னியது. இதனால், 5வது இடத்திற்கு முன்னேறினார்.

தொடர்ந்து நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மிதாலி ராஜின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுண்டரிfளை விளாசி  வெற்றி இலக்கை அடையச் செய்த மிதாலி ராஜ் 75 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக  762 புள்ளிகளுடன் ஐசிசி பெண்கள் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த இன்னிங்ஸில் 23-வது ஓவரில் பவுண்டரி அடித்த மிதாலி ராஜ் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை எட்டினார்.

முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் முதலிடம் வகித்திருந்தார். இந்த சாதனையைத்தான் மிதாலி ராஜ் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீராங்கனைகள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

‘சுமார் 22 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜின் வயது 38. இவர்  கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். 8 முறை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மிதாலி ராஜ், இளம் வீராங்கனைகளை எல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டு, 16 ஆண்டுகளுக்கு பிறகும், தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.