சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், 76,181 பேர் தகுதி பெற்றாலும் பெற்றாலும் 11,850 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வருகிறது. தற்போதைய தேர்வு முடிவு குறித்து கூறிய அமைச்சரும், நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு சுமை தான் என்றாலும் நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வை எழுதிதான் ஆக வேண்டும் என்று கூறி உள்ளார்
சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையத்திற்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் நீட் தேர்வில் தோல்வியடைந்த மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் 4-வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 35,715 பேரில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேருக்கு முதல்கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 600 மாணவ, மாணவிகளை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தனிமையை தவிர்த்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். பயத்தோடு, பதற்றத்தோடு இருக்கும் மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தப் பயிற்சி பயன்படும்.
தமிழகத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 இடங்கள் மட்டுமே உள்ளன. நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.
நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய கால்நடை மருத்துவம், யோகா போன்ற பட்டப்படிப் புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் மனநலனை திடப்படுத்திடும் வகையில் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகள், அவர்களுக்கு அறிவித்திடும் வகையிலும் ஒரு முயற்சியாக மனநல ஆலோசனை பயிற்சி தொடங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.