சென்னை: சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அறிபிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் 2022ம் ஆண்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த 2023, 2024-ம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் போட்டி அட்டவணையில், சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இடம்பெறாமல் இருந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னையில், மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசின் உதவியுடன் தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பயனாக இந்த ஆண்டு முதல் மீண்டும் தமிழ்நாட்டில் WTA மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்து அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் சென்னையில் அக்டோபர் மாதம் 27ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில், 32 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு, 16 அணிகள் பங்கேற்கும் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. SDAT நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் போட்டி நடைபெறும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடர் மீண்டும் நடத்தப்படவிருப்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “இறுதியாக, சென்னைக்கு ஒரு பெரிய சர்வதேச விளையாட்டு அல்லது டென்னிஸ் போட்டியைக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகள் பலனளித்துள்ளன.” தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேசன் தலைவர் ( TNTA) தலைவர் விஜய் அமிர்தராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.