சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை 75% கட்டண சலுகையுடன் ஏற்றி செல்ல வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண வசதியும் தொடர்கிறது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் கட்டண சலுகை வழக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது முறையாக பேருந்தை நிறுத்தி ஏற்றுச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது, கோபமாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின் நகல் அட்டை கொண்டு 40 சதவீத மாற்றுத்திறன் மற்றும் அதற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் பாகுபாடின்றி 75சதவிகித பயணக் கட்டணனச் சலுகை வழங்க வேண்டும் என்றும், பேருந்து நிறுத்தத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால்கூட அவரை பேருந்தில் ஏற்றிச்செல்ல வேண்டும் என அனைத்து போக்குவரத்துக கழக மேலாண் இயக்குனர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.