சென்னை: நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக  அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

73 ஆவது குடியரசு நாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்ததுடன், நீட் தேர்வு மும்மொழிக் கொள்கைகளுக்கு ஆதரவு  தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில்,  கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு ஆளுநர் தனது இசைவினை விரைவில் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை நிறைவேற்ற துணை நிற்பார் என நம்புகிறேன்.

நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும்.

அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களைப் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் முதலமைச்சர் தொடந்து வலியுறுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில், தமிழ் நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது. ஆளுநர் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து மத்திய  அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின்றேன் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து கூறியுள்ளார். அதாவது, 1967 முதல் இன்றுவரை இரு மொழி கொள்கையே தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக கடைபிடிக்கப்பட்டு வருவதை ஆளுநரின் கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன். இருமொழி கொள்கையால் தமிழ்நாடு மாணவர்களின் கல்வித்தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் இடம்பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ, குறைகளோ ஏதுமில்லை என்பதையும் ஆளுநர் நன்கறிவார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.