சென்னை: வரும் ஆண்டில் கண்டிப்பாக 75% வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை எழுத முடியும் என சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட  கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பதில் அளித்தார்.  அப்போது, இரண்டு நாற்காலிகள், ஒரு மைக் இருந்தால் போதும் என ஊடகத்துறை யினரை கடுமையாக சாடினார். 

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன்  சிறப்பு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நீண்ட விளக்கம் அளித்தார். அப்போது,

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதுபோல பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு செய்தி எப்படியெல்லாம் திரித்து பேசப்படுகிறது? பள்ளிக்கு 3 நாட்கள் வந்துவிட்டால் போதும் என்று அமைச்சர் சொல்லிவிட்டார் என்று ஒரு செய்தி. அந்த செய்திக்கு ஒவ்வொருவரும் தனித்தனி யாக விவாதங்கள் நடத்துகிறார்கள்.

அது தொலைக்காட்சி விவாதமாக இருந்தாலும் சரி, பத்திரிகை செய்தியாக இருந்தாலும் சரி. இரண்டு நாற்காலிகள், ஒரு மைக் இருந்தால் போதும். ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். இது அப்படி சொல்லப்பட்ட செய்தி அல்ல என்பது குறித்த விளக்கத்தை நான் தருவதற்கு முன்பாக இந்த செய்தி எப்படி இப்படி வந்தது?  இதுபோல் நாங்கள் சொல்லவில்லையே என திருத்திச் சொல்லும்போது, அடுத்த நாளே ஒரு பத்திரிக்கை தலைப்புச் செய்தியில் போடுகிறார்கள்… அமைச்சர் அந்தர் பல்டி என்று என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பத்திரைக்கையின் தலைப்புச்செய்தி என்பது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விழிகளைப் பிடுங்கி எறிவதாக இருக்கக்கூடாது. பகுத்தறிந்து பார்த்து வரும் செய்தியாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பதற்றங்களை உருவாக்கக்கூடிய செய்தியாக இருக்கக்கூடாது. இந்த வேண்டுகோளை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் குறிப்பாக ஒரு பத்திரிகைக்கு வைக்கிறேன்” என்றார்.

“பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் எனது கடமையல்ல. பன்னிரெண்டாம் வகுப்பில் 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் பங்கேற்காமல் போனார்கள் என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இதே நாளில்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்ல மற்ற எல்லாத் துறைகளையும் கொரோனா காலம் மாற்றிப்போட்டது. இவை அனைத்தையும்தான் கணக்கில் எடுக்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன்பும் பின்பும் என்ன மாற்றத்தைக் கண்டு வருகிறோம் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். கொரோனா காலமாக பல மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை சிரமங்களை சந்தித்து வருகிறது என்றவர்,  கொரோனா காலத்துக்குப் பிறகு கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டார்கள். இவர்கள்தான் தற்போது 12ஆம் வகுப்பு தேர்வை எழுதி வருகிறார்கள்.

2021- 22ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு தேர்வை எழுத 8,55,05 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 41 ஆயிரம் வருகை பெறவில்லை. 1,25,127 பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தமுள்ள 1.90 லட்சம் மாணவர்களில் 78 ஆயிரம் பேரைக் கண்டுபிடித்து, இந்த ஆண்டு தேர்வு எழுத வைத்திருக்கிறோம். 8,36,593 பேர் இதில் உள்ளடங்குவர். ஒருமுறை சிறப்பு நிகழ்வாக வருகைப் பதிவேட்டைத் தகுதியாகக் கொள்ளாமல், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.  கொரோனாவால், இடைநின்றி, 1.90 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம் என்றவர், இடைநின்ற மாணவர்கள்மீது, அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது.  பொதுத்தேர்வெழுத 75% வருகைப்பதிவு மாணவர்களுக்கு அவசியம் என்றவர், உடல் நலம், மன நலம் சார்ந்த பயிற்சிகள், பயிற்சிக் கையேடு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் சிறப்புப் பயிற்சிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர்  விளக்கம் அளித்துள்ளார்.