சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 700 கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில்  விடுதலை தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளின்போது 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வகிக்கும், கைதிகளை விடுதலை செய்வது தமிழ்நாட்டில் வழக்கமான நடைமுறையாக தொடர்ந்து வருகிறது. அதுபோல, தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு,  700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இதுகுறித்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்தார். அதில்,  அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறியிருந்தார்.

அதையொட்டி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அதில், கைதிகள் நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து  ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளது. அவர்கள் அரசின் வழிக்காட்டுதல்களுக்கு உட்பட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

குறிப்பாக, கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல் ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.