பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் ஆதரவு… பள்ளிக்கல்வித்துறை தகவல்…

Must read

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 9 மாதங்களாக மேலாக கல்வி நிறுவனங்கள்  மூடப்பட்டுள்ள நிலையில்,  பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து,  பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகளில்  பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் 2 நாட்களாக நடத்தப்பட்டது.

இதில் 70சதவிகித பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக, மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.  ஆன்லைன் மூலம் கல்வி கற்பதால், அதில் தோன்றும் விளம்பரங்கள் போன்றவற்றால்,  மாணாக்கர்களின் கவனம் சிதறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதுபோல பல  பெற்றோர்களும் பள்ளிகளை திறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதற்கிடையில்,தமிழகத்தில் வரும்  பொங்கல் விடுமுறை முடிந்ததும் வரும் 18ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கடந்தஆண்டு இதுபோன்று நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில்   பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில், கொரோனா தொற்று குறைந்து விட்டதால, பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

More articles

Latest article