நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்பையை எரிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நூதுராம் கோட்சே” என்று தெரிவித்தார். கமலின் இக்கருத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகளும், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், திருச்சி சிந்தாமணி சிலை அருகே கமலின் உருவ பொம்மையை எரிக்க அகில பாரத இந்து மகா சபா கட்சியினரும், இந்து மக்கள் கட்சியினரும் இணைந்து திட்டமிட்டிருந்தனர். உருவபொம்மையை எரிக்க வந்த அவர்களை தடுத்த கோட்டை சரக காவல் உதவி ஆணையர் சந்திரசேகர், ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் அடங்கிய காவல் படையினர், இரு கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேரை கைது செய்தனர்.