கேரளா: ஐ.எஸ் பயங்கரவாதிகள் 7 பேர் கைது! நாசவேலைக்கு சதியா…?

Must read

திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் உள்பட 21 பேர் திடீரென மாயமானார்கள். அவர்கள் எங்கு சென்றார் என்று தெரியாமல் இருந்தது. பின்னர் அவர்கள் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாகவும், அங்கு ஐஎஸ் பயங்கரவாத குழுவினருடன் சேர்ந்து விட்டதாகவும், தங்களை தேட வேண்டும் என உறவினர்களிடம் பேசியதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலை  மத்தியஅரசின் கவனத்திற்கு கொண்டுசென்றது கேரள அரசு.  மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமையின்  அதிகாரிகளும் கேரளா வந்து மாயமானவர்களின் பின்னணி  குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினர்.
isis1
விசாரணையில் சமூக ஊடகங்கள் மூலம் கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியினை ஒரு கும்பல்  ரகசியமாக நடத்தி வந்தது தெரிய வந்தது.  கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பலருக்கு ஐ.எஸ். அமைப்பின் பிரதிநிதிகளோடு தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து,  ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகளை  மோப்பம் பிடித்த தேசிய புலனாய்வு முகமையின் உயர் அதிகாரிகள்  10 நாட்களுக்கு  முன்பு தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முகாமிட்டு கண்காணிக்க தொடங்கினர்.
இதில் ஐஸ் பயங்கரவாதிகளின் கூட்டம் நடைபெறும் இடம் தெரிய வந்தது. இதில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள இருப்பது தெரிய வந்தது.  அதையடுத்து அவர்களை கூண்டோடு பிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று ஐ.எஸ்  தீவிரவாத கும்பலின் ரகசிய கூட்டம்  கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலை உச்சியில் உள்ள பாறை மறைவில் இருப்பதும், இதில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்க இருப்பதும் தெரிய வந்தது.
மாலையில் தீவிரவாத குழுவினர் ஒன்று சேர்ந்ததும் திரடி நடவடிக்கையில் இறங்கிய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கனகமலை குன்று பகுதியை உள்ளூர் போலீசார் துணையுடன் முற்றுகையிட்டு துப்பாக்கி முனையில்  சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை  கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டுச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள்:
மன்சீத் என்ற உமர்அலி என்ற முத்துக்கா(வயது30),  கண்ணூர், கேரளா.
அபுபஷீர் என்ற ரஷீத் என்ற புச்சா என்ற அமீர் (வயது 29) கோழிக்கோடு,   கேரளா
சுவாலிக் முகமது என்ற யூசுப் என்ற அபுஹசானா(வயது 26) வெங்கநல்லூர், திருச்சூர், கேரளா
ஸ்வாபாம்(வயது 25) பொன்னுமுட்டம், திரூர், கேரளா,
ஜாசிம்(வயது 25) குட்டியாடி, கோழிக்கோடு, கேரளா
ராம்ஜத் நகீலன்  கன்டியல் என்ற ஆமு(வயது 24) குட்டியாடி, கோழிக்கோடு, கேரளா
கைதான 6 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைதான சுவாலிக்முகமது என்ற யூசுப் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்துள்ளார். அங்கும் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின்  விசாரணையில் அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய தகவல்களும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில்   நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் கடையநல்லூரில்  வாடகை வீட்டில் பதுங்கி இருந்த ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் சுபஹானி என்பவரை கைது செய்தனர்.
அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் தொடு புழா ஆகும். அவரை சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாணை நடத்தப்பட்டது.
கைதானவர்களில் அபுபஷீர் என்ற ரஷீத் கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர். பஷீருடன் கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நவாஸ்(19), நவாஸ் கான்(24), உபைசுல் ரகுமான்(24), நபி (23) ஆகிய 4 பேர் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. போலீஸ் அதிகாரிகள் 20 பேர் நேற்று இரவு கோவை வந்தனர். மாநகர போலீசார் உதவியுடன் நவாஸ் உள்பட 4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்களது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நவாஸ், நவாஸ்கான், உபைசுல் ரகுமான், நபி ஆகிய 4 பேரையும் விசாரணைக்காக கோவை மாநகர போலீஸ் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு 4 பேரிடமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்று வருகிறது.

More articles

Latest article