டெல்லி: பிரதமரின் இலவச வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன  என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில், நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதற்காக 2015ஆம் ஆண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் (Pradhan Mantri Awas Yojana) திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி, நலிவுற்ற சமூகங்கள், குறைந்த வருமானம் பெறுவோர், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி ஏழை, எளிய மக்களுக்கு 2 கோடி வீடுகள் கட்டித் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  அதற்காக, நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் என பிரதமர் வீட்டு வசதித் திட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2.8 கோடி வீடுகள் கட்டித் தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டரை கோடி  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மக்களவையில் தமிழக எம்.பி. ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூவமாக பதிலளித்தார்.

அதில்,  கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2 கோடியே 95 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த இலக்கில் 2 கோடியே 94 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதில், பிப்ரவரி 3-ஆம் தேதி வரை 2 கோடியே 55 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரத்து 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில அரசு பங்குத் தொகையுடன் சேர்த்து இதுவரை 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் 7லட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 900 பயனாளிகளுக்கு இன்னும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார்.