சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

பாஜக மாவட்ட நிர்வாகியான ஆண்டால் சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய சகோதரி தேவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில்,

“கடந்த 21-ந் தேதி அன்று இரவு, நான் எனது சகோதரி ஆண்டாள் வீட்டில் இருந்தபோது, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் தூண்டுதலின் பேரில், அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர், எங்கள் வீட்டில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது எனது தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

பிரதமர் மோடி கடந்த 19-ந் தேதி சென்னை வந்தபோது, ஆட்கள் அழைத்துச் செல்வது தொடர்பாக எனது சகோதரி ஆண்டாளுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.  எனவே அதையொட்டி அமர் பிரசாத் ரெட்டியின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் :

என்று கூறப்பட்டுள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது,  இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதரை காவல்துறை கைது செய்தthu. பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவானதால் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவலர் தேடி வந்தனர்.

கடந்த வாரம் தமக்கு முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நேற்று அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் கையெழுத்துப் போடாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.