சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக  மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்பட பல இடங்களில்  நேற்று முழுவதும் அடை மழை பெய்ததன்  காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்னைக்கு  குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான  செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் வரத்து எதிர்பாரத்த அளவுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் நிரம்பி வரும் நிலையில், சோழவரம், செங்குன்றம் ஏரிகளுக்கு மழைநீர் சரியான முறையில் வந்து சேர முடியாத சூழலே நிலவி வருகிறது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக  காஞ்சிபுரத்தில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த கூடிய பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும், தற்போது  98 ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 909 ஏரிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது  மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது.

125 ஏரிகள் 75% அளவுக்கு நீர் நிரம்பி இருப்பதாகவும், 206 ஏரிகள் 50% சதவிகிதமே நீர் நிரம்பி இருப்பதாகவும்,  125 ஏரிகளில் வெறும்  25% தண்ணீரே உள்ளதாகவும், 324 ஏரிகளி 25% குறைவாகவே தண்ணீர் தேங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிரம்பியுள்ளன.கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதைச்சுற்றி மட்டும் சுமார் 210 நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பல நீர்நிலைகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், குடிசைகளாகவும் மாற்றப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மீண்டும் வீடுகளில் தண்ணீர் புகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அடையாற்றில்  தண்ணீர் இரு கரையும் தொட்டுக்கொண்டு செல்வதால்,  கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.