சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக,  இந்தியாவில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகளும் பிளஸ்2  தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளன. அதன்படி, தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என ஒருதரப்பினரும், தேர்வு நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், தமிழகஅரசு பெற்றோர்களிடம் கருத்துக்கேட்க உத்தரவிட்டது. உயர்படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளதாகவும் இது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறி, வாட்ஸ் அப் எண் மற்றும் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டிருந்தன.அதன்படி, பல பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும்அதிகாரிகள் இன்று  ஆலோசனை நடத்துகின்றனர். இந்த . ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுமா  அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.