சென்னை: வண்டலூர்  மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்றுமுதல் கட்டணம் வசூல் பயன்பாட்டுக்கு வந்தது. 60 கி.மீட்டர் தூரமுள்ள இந்த வெளிவட்டச் சாலையில் 4 டோன் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலில் ஏற்படாமலிருக்க  தென் தமிழகம் உள்பட வடமாநிலங்களிலிருந்து அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயில் சிட்கோ, மாதவரம், மணலி, நியூடவுன் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் செல்லவும் துறைமுகம் செல்ல வண்டலூர் முதல் மீஞ்சுர் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 400 அடி சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்து  கடந்த வருடம் (2021) பிப்ரவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டு கனரக வாகனங்கள் வெளி வட்டச் சாலையில் எவ்விதக் கட்டணமுமின்றி சென்று வந்தன இதையடுத்து  இன்றுமுதல் (2022ம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி)  சுங்கக் கட்டண முறை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை  மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோமீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூபாய் 2,156 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன. முதற்கட்டமாக வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை முடிவடைந்த நிலையில் தற்போது நெமிலிச்சேரி துவங்கி மீஞ்சூர் வரை இரண்டாம் கட்ட பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த சாலைநாள் ஒன்றுக்கு  சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் நாளொன்றுக்கு பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் பணியும் இன்றுமுதல் தொடங்கி உள்ளது. மேலும், இந்த வெளிவட்ட சாலையில், இரவிலும் பகல் போன்று இருக்கும் அளவிற்கு 60 கிலோமீட்டர் தூரத்திற்கும் மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ உதவி மையம், அவசர கால தொலைபேசி வசதி போன்ற நவீன வசதிகளுடன் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுங்க வசூல் செய்யும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது .அதன்படி பாஸ்ட்ராக் (Fastag) வசதி உள்ள வாகனங்கள் தனியாக கட்டணம் செலுத்தும் ஏற்பாட்டையும் பிற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.